"மாணவர்கள் லட்சியங்களை அடைய விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்" இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன் பேச்சு


மாணவர்கள் லட்சியங்களை அடைய விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும் இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன் பேச்சு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

“மாணவர்கள் சிறந்த லட்சியங்களை எதிர்கால கனவுகளாக கொண்டு அதை அடைய விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்” என்று திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன் பேசினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

"மாணவர்கள் சிறந்த லட்சியங்களை எதிர்கால கனவுகளாக கொண்டு அதை அடைய விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்" என்று திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன் பேசினார்.

பட்டமளிப்பு விழா

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் 23-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசி, ஆண்டறிக்கை வாசித்தார்.

சென்னை இன்போசிஸ் நிறுவன டெக்னாலஜி ஆர்க்கிடெக்ட் அதிகாரி முகமது முனாவர் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 367 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகளாவிய அதிகார மையம்

'கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு' என்ற அவ்வையாரின் கூற்றிற்கு இணங்க, பட்டம் என்பது கற்றலின் ஆரம்பமே ஆகும். தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு மாணவ-மாணவிகள் மென்மேலும் கற்றுக்கொள்ள வேண்டும். நமது நாடு அதிகளவில் பொறியாளர்களை உருவாக்குவதன் மூலம் உலகளாவிய அதிகார மையமாக திகழ்கிறது. எங்கும் தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் முன்எப்போதும் இல்லாத வகையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயம், அறிவியல், உற்பத்தி, தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் நமது நாடு முன்னேறியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் ரிமோட் சென்சிங் பயன்பாடுகள் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறது.

விடாமுயற்சி

தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் மூலமாக தொலைக்காட்சி, தொலைநிலை கல்வி, தொலை மருத்துவம், வானிலையியல் அனைவருக்கும் எளிதில் சாத்தியமாகிறது.

வானிலை முன்னறிவிப்புகள், வானிலை கண்காணிப்பு மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாணவர்கள் சிறந்த லட்சியங்களை எதிர்கால கனவுகளாக கொண்டு அதனை அடைய விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்க வேண்டும். முறையான கல்வியுடன் நேர்மை தவறாமலும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். அனைவரிடமும் மரியாதையுடனும், நன்றியுணர்வுடனும் இருக்க வேண்டும். மாணவர்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைய மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

விழாவில் ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story