மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
விக்கிரபாண்டியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படிக்கின்றனர். எனவே கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் இடிக்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாவட்டகுடி, லட்சுமி நாராயணபுரம், மஞ்சவாடி, திருக்கொள்ளிக்காடு, நந்திமாங்குடி, ஆலாத்தூர், புழுதிக்குடி, சோமாசி, இருள்நீக்கி, சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 360-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்த பள்ளியில் நான்கு வகுப்பறை கொண்ட 2 கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. இதனால் ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டது. மற்றொரு கட்டிடம் இடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
கட்டிட வசதி இல்லை
பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாததால் நெருக்கடியாக வகுப்பறையில் தரையில் அமர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் தினமும் மாணவர்கள் அமர்ந்து படித்துவருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி போதிய கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஒன்றியக்குழு உறுப்பினர் அரவிந்த் கூறுகையில், விக்கிரபாண்டியம் கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
இந்தப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் பழுதடைந்ததால் 10 வகுப்பறைகள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் நான்கு வகுப்பறையில் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் காலை- மாலை நேரங்களில் மரத்தடி நிழலில் வைத்து பாடம் நடத்தப்படுகிறது.
கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
இது சம்பந்தமாக பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் அரசியல் கழகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. இனி மழைக்காலம் தொடங்க இருப்பதால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த பள்ளிக்கு உடனடியாக கட்டிட வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ேமலும் பள்ளிக்கு கழிவறை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.