உணவு வழங்காததை கண்டித்து மாணவர்கள் தர்ணா
அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் உணவு வழங்காததை கண்டித்து விடுதி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உணவு வழங்கவில்லை
அன்னவாசலில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கி கல்வி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் தற்போது 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் விடுதியை விட்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 3 நாட்களாக சரிவர உணவு வழங்கவில்லை என தெரிகிறது. பட்டினியால் வாடிய மாணவர்கள் செய்வதறியாது தவித்து வந்துள்ளனர். விடுதி சமையலர் கடந்த மூன்று நாட்களாக மது போதையில் விடுதியில் படுத்து உருண்டதாகவும், தொடர்ந்து போதையில் இருந்ததால் சமைக்கவில்லை எனவும் மாணவர்கள் கூறினர்.
மாணவர்கள் தர்ணா
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதி முன்பாக திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விடுதி காப்பாளர், சமையலர் ஆகியோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு உணவு வழங்காமல் உணவு பொருள்களை பதுக்குவதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும் விடுதி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சலவை சோப், தலைக்கு தேய்க்கும் எண்ணெய், சீருடைகள் ஆகியவற்றை வழங்குவதில்லை எனவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் பிரவீனா மேரி விடுதிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பரபரப்பு
அப்போது அன்னவாசல் பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலைமதுரம், தங்கராஜ் ஆகிய 2 பேரும் விடுதிக்கு சென்று மாணவர்களுக்கு உணவு வழங்காதது குறித்து விவரம் கேட்டனர். அப்போது ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கவுன்சிலர்களை வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கவுன்சிலர்கள் தரப்பினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.