பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி: தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி:  தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் மறியல்  அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x

பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியானதை தொடர்ந்து தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம்

கன்னங்குறிச்சி,

மாணவர் பலி

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். அவருடைய மகன் அப்துல்கலாம் (வயது 21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் (சி.ஏ.) 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் கல்லூரி முடிவடைந்ததும் பஸ்சில் ஏறினார்.

இந்த பஸ் கல்லூரியில் இருந்து வெளியே வந்த போது திடீரென அப்துல்கலாம் கீழே இறங்கினார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் கல்லூரி பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலை அந்த கல்லூரியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கல்லூரி பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பஸ்கள் கல்லூரிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர்கள் முருகேசன், சரவணகுமரன், தாசில்தார் செம்மலை, வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் மாணவர்கள் கூறும் போது, மாணவர் இறந்ததை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கவில்லை, மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

கல்லூரிக்கு விடுமுறை

பின்னர் அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மாணவர்களிடம் இறந்த மாணவரின் பெற்றோர் மற்றும் அவர் சார்ந்த சமூகத்தின் மூத்த நிர்வாகிகளிடம் பேசி விட்டோம் என்றும், கல்லூரிக்கு விடுமுறை விடுகிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே அப்துல்கலாமின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story