பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

32 விடுதிகள்

அாியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு 28 பள்ளி விடுதிகள், 3 கல்லூரி விடுதிகள் மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரி விடுதி என மொத்தம் 32 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவு தங்கும் வசதி, 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் ஆகிய சலுகைகள் எவ்வித செலவினமும் இல்லாமல் வழங்கப்படுகின்றன. விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

15-ந்தேதிக்குள்...

தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை வருகிற 15-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ-மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story