நோட்டுகள் வழங்காததால் மாணவர்கள் பாதிப்பு


நோட்டுகள் வழங்காததால் மாணவர்கள் பாதிப்பு
x

அரசு பள்ளிகளில் விலையில்லாத நோட்டு புத்தகங்கள் வழங்காததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

அரசு பள்ளிகளில் விலையில்லாத நோட்டுகள் வழங்காததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

பாட புத்தகங்கள்

தமிழகத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி 1 முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர். வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படாததால், தொடர்ந்து படிக்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நோட்டு புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி இருந்தனர்.

குறைவாக வந்தது

இதைத்தொடர்ந்து கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று காலை 8 மணி முதல் கூடலூர் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களை வாங்குவதற்காக வந்திருந்தனர். சராசரியாக ஒரு மாணவருக்கு 12 நோட்டுகள் தேவைப்படுகின்ற நிலையில், 4 நோட்டுகள் என்ற கணக்கின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குறைந்த நோட்டுகள் வழங்கப்பட்டது.

மேலும் பெரும்பாலான பள்ளிகளுக்கு நோட்டுகள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாட்டவயல், அய்யன்கொல்லி, தாளூர் உள்பட தொலைதூரங்களில் இருந்து வந்த ஆசிரியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். போதிய அளவு நோட்டுகள் வழங்கப்படாதது குறித்து ஆசிரியர்கள் அலுவலர்களிடம் விசாரித்தனர். அப்போது சென்னையிலிருந்து குறைந்த அளவு நோட்டுகள் மட்டுமே வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் நோட்டுகள் வாங்காமல் அங்கிருந்து சென்றனர்.

மாணவர்கள் பாதிப்பு

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் நேரில் சென்று வழங்க வேண்டும். ஆனால், நீண்ட தொலை தூரங்களில் உள்ள ஆசிரியர்கள் கூடலூருக்கு வந்து வாங்கி செல்லும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்களின் தேவைக்கேற்ப இதுவரை நோட்டுப் புத்தகங்கள் வரவில்லை. இதனால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story