விழுப்புரத்தில்பல்லாங்குழிகளான கல்லூரி சாலையால் பரிதவிக்கும் மாணவிகள்
விழுப்புரத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலை பல்லாங்குழிகளாகி கிடப்பதால் மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களில் பல மாணவிகள், தங்கள் கிராமங்களில் இருந்து அரசு பஸ்கள் மூலம் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள், விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகில் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள கல்லூரிக்கு நடந்து செல்கின்றனர்.
சேதமடைந்த சாலை
ஆனால் இவர்கள் பயன்படுத்தி வரும் சாலையானது பல இடங்களில் குண்டும், குழியுமாகவும், ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பல்லாங்குழிபோல் காட்சியளிக்கிறது.
இதனால் மாணவிகள், இச்சாலையில் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை மாணவிகள், கோரிக்கை விடுத்தும் சாலையை பராமரிப்பு செய்து சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சாலையை சீரமைத்து கல்லூரி வரை டவுன் பஸ்கள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தால் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் குறித்த நேரத்தில் சிரமமின்றி கல்லூரிக்கு செல்லவும் ஏதுவாக அமையும். எனவே படுமோசமான நிலையில் இருக்கும் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?