பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்


பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
x

சீர்காழி, மணல்மேடு பகுதிகளில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, பந்தநல்லூர் வழியாக கும்பகோணத்திற்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கும்பகோணம் சென்று அங்குள்ள பள்ளி-கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல தொழிலாளர்களும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

ஆபத்தான பயணம்

ஆனால் மேற்கண்ட பகுதியில் இருந்து கும்பகோணத்திற்கு குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் கிடைக்கிற அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏறி பயணிகள் மற்றும் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டும், பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியில் ஏறி நின்றும், பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்தும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், வளைவுகளில் பஸ் திரும்பும்போது அவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் நீடித்து வருகிறது.

மணல்மேடு

இதேபோல மணல்மேடு பகுதியில் இருந்து வைத்தீஸ்வரன்கோவில் பகுதிக்கு குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுவதால் அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் முண்டியடித்து ஏறி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு பஸ் படிக்கட்டில் நின்றவாறு சென்ற ஒரு கல்லூரி மாணவர் சமீபத்தில் தவறி விழுந்து காயம் அடைந்தார்.

ஆகவே, கூடுதல் பஸ் இயக்கக்கோரி சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஆனால் இதுவரை கூடுதல் பஸ்கள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தரிவிக்கின்றனர். ஆகவே சீர்காழி, மணல்மேடு பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story