கோட்டூரில், மாணவிகள் சாலை மறியல்


கோட்டூரில், மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:30 AM IST (Updated: 20 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பஸ் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து கோட்டூரில் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

பஸ் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து கோட்டூரில் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

களப்பால் பஸ்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்த காடுவாகுடி, செல்ல பிள்ளையார் கோட்டகம், அழகிரி கோட்டகம், காடுவாக் கொத்தமங்கலம், திருக்களார், மீனம்பநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் கோட்டூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

அவர்கள் தினந்தோறும் காலை, மாலை என மன்னார்குடியில் இருந்து களப்பால் வந்து செல்லும் அரசு பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை 5.30-க்கு வர வேண்டிய அரசு பஸ் தாமதமாக இரவு 7 மணிக்கு தான் வந்தது.

சாலை மறியல்

அப்போது அந்த பஸ்சை பார்த்ததும் மாணவிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் கூறியதாவது:- களப்பால் வந்து செல்லும் பஸ்சை தான் நாங்கள் பெரிதும் நம்பி இருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ் வருவதில்லை.

இந்த வழித்தடத்தில் போதுமான பஸ் வசதியும் இல்லை. உள்‌ கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டி உள்ளது. தினமும் இரவு 8 மணிக்கு மேல்தான், நாங்கள் வீட்டிற்கு செல்ல முடிகிறது. இதனால் பல்வேறு கஷ்டங்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

கூடுதல் பஸ்

இனிமேலாவது பள்ளிக்கூடத்தின் நேரத்தை கணக்கிட்டு பஸ் இயக்க வேண்டும். மேலும் மன்னார்குடி- களப்பால் இடையே கூடுதல் பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு மாணவிகள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், தனிப்பிரிவு ஏட்டு செல்வக்குமார் ஆகியோர் உடனடியாக மன்னார்குடி போக்குவரத்துக்கழக கிளை மேலாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு, பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.


Next Story