கொட்டும் மழையில் பள்ளிகளுக்கு நனைந்து சென்ற மாணவ, மாணவிகள்


கொட்டும் மழையில் பள்ளிகளுக்கு நனைந்து சென்ற மாணவ, மாணவிகள்
x

வேலூரில் கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் நனைந்த வாறு பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்முண்டியில் 36.40 மில்லி மீட்டர் அளவு மழை பதிவானது.

வேலூர்

வேலூரில் கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் நனைந்த வாறு பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்முண்டியில் 36.40 மில்லி மீட்டர் அளவு மழை பதிவானது.

பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் அளவு பதிவாகி வந்தது. ெகாளுத்தும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவியது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழையாகவும், லேசான மழையாகவும் மாறி, மாறி பெய்தது.

மழையால் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. இன்றும் மழை தொடர்ந்ததால் விடுமுறை விடப்படும் என்று மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மாணவர்கள் வேக, வேகமாக பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

மாணவ- மாணவிகள் அவதி

காலை 8 மணிக்கு மேல் மழையின் வேகம் அதிகரித்தது. பலத்த மழையாக பெய்ததால் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். பலர் மழையில் நனைந்தபடியும், சில மாணவர்கள் ஆட்டோவிலும் சென்றனர். சில பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வேலூர்-ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சாலை சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் காட்சியளித்தது.

இந்த சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

திருவலம்

திருவலம், வள்ளிமலை, பொன்னை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சாரல்மழை பெய்துவந்த நிலையில், இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்தது. பள்ளிக்கு விடுமுறை இல்லாததால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தும் பள்ளிக்கு சென்றனர்.

குடியாத்தம்

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் குடியாத்தம் ஒன்றியம் செருவங்கி ஊராட்சி கார்த்திகேயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று பள்ளி விடுமுறைக்கு பின் இன்று பள்ளி வழக்கம் போல் இயங்கியது.

பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் பள்ளியின் முன்பு தேங்கி இருந்த தண்ணீரில் நடந்து வந்து தங்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்டுச் சென்றனர். பெற்றோர் இல்லாமல் தனியாக வந்த மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிக்கு தண்ணீரில் நடந்து சென்றனர்.

அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் மழைக்காலங்களில் இப்பள்ளியை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. தண்ணீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பொன்னை 12.60, விரிஞ்சிபுரம் 22.20, வேலூர் 23.50, காட்பாடி 26, மேலாலத்தூர் 29.20, குடியாத்தம் 32, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதி (அம்முண்டி) 36.40.


Related Tags :
Next Story