ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்


ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்
x
தினத்தந்தி 25 Feb 2023 10:56 PM IST (Updated: 25 Feb 2023 10:57 PM IST)
t-max-icont-min-icon

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம், ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்களால் ஆசிரியர்கள், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனா்.

விழுப்புரம்

படியில் பயணம், நொடியில் மரணம் என்ற வாசகம் பஸ்களில் இடம்பெற்று இருக்கும். ஏதோ கடமைக்கு எழுதப்பட்ட வாசகம் அல்ல அது. எச்சரிக்கை விடுக்கும் அந்த வாசகத்தை, இளைஞர்கள் எளிதாக எடுத்துக்கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது. இளம்கன்றுகள் பயம் அறியாது என்பது என்னவோ உண்மைதான். அதிலும் படித்தவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் விளையாட்டு பிள்ளைகளாக நடந்து கொள்வதுதான் வேதனையிலும் வேதனை.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை பொறுத்தவரையில், அரசு மற்றும் தனியார் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து, ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் இளைஞர்களை நித்தமும் காண முடியும்.

ஒருபுறம் பஸ் பற்றாக்குறையால் இப்படி அவர்கள் செல்வதாகக்கூறினாலும், பெரும்பாலான பஸ்களில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வழக்கத்தைதான் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். அதிலும் சில மாணவர்கள் பஸ் ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு காலை, தரையில் தேய்த்து 'ஸ்கேட்டிங்' செய்யும் விபரீத விளையாட்டையும் மேற்கொள்கின்றனர்.

சாகச பயணம்

படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால்தான், அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ? கதாநாயகன் என்ற மிதப்பில் இவ்வாறு சாகசப் பயணம் செய்கின்றனர்.

அவர்களின் அத்துமீறல்கள் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும்கூட அச்சப்பட செய்கின்றன.

அதுமட்டுமா? குழுவாக சேர்ந்து பாடுவது, தாளம் போடுவது, பஸ் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம்போடுவது போன்ற பொறுப்பற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இதில் அந்த பஸ்சை இயக்கும் டிரைவர், கண்டக்டரின் நிலைதான் பரிதாபம். 'இவர்களிடத்தில் வாக்கப்பட்டு நாங்கள் படும் கஷ்டத்தை என்ன சொல்வது?' என்பதே அவர்களின் வேதனையாக வெளிப்படுகிறது.

பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும், அவர்களின் போக்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? அவர்களின் இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்பன பற்றி ஆசிரியர்கள், பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

விழிப்புணர்வு தேவை

விழுப்புரம் தலைமை ஆசிரியர் செல்லையா:-

இன்றைய மாணவர்கள், பஸ்சின் உள்ளே இடம் இருந்தாலும் பஸ்சிற்குள் சென்று பயணம் செய்ய விரும்புவதில்லை. படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்ய விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல பஸ்சின் பக்கவாட்டில் இருக்கும் கம்பியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். இப்படி பயணம் செய்யும் மாணவர்களுக்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர், பஸ்சை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறி பஸ்சிற்கு உள்ளே பயணம் செய்ய அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து தக்க அறிவுரை வழங்கலாம். அதுமட்டுமல்ல பள்ளிகளுக்கு போக்குவரத்துத்துறை, காவல்துறை அதிகாரிகள் சென்று, படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள், அதன் விதிமுறைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பஸ் வசதி குறைவாக உள்ள பகுதிகளில் அதிக பஸ்களை மாணவர்களுக்காக இயக்கினால் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இதுபோன்ற பிரச்சினையும் இருக்காது. பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், காலை இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களிடத்தில், பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதால் வரும் ஆபத்தை கூறி அறிவுரை வழங்குகிறோம். மாணவர்களுக்கு, படிக்கட்டில் பயணம் செய்வதால் தவறி விழ நேரிட்டால் அந்த உயிரின் மதிப்பை பற்றியும் அதனுடைய பாதிப்பை பற்றியும் அறிவுரை வழங்கப்படுகிறது. பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு, பஸ்சில் பயணம் செய்யும்போது பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி நல்வழிப்படுத்த வேண்டும்.

ஆபத்தானது

திண்டிவனம் ஆசிரியர் சவுந்தர்:-

பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வது ஆபத்தானது. இதனால் கீழே விழுந்து காயமடைவது மட்டுமல்லாமல் சில சமயங்களில் இறந்தும் போகிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் 5 அல்லது 6 குழந்தைகள் இருந்தனர். தற்போது குடும்பங்களில் பெற்றோர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்று வளர்க்கிறார்கள். இந்நிலையில் விபத்தில் மாணவர்கள் இறக்க நேரிட்டால் அவரது குடும்பமே சின்னாபின்னமாகிறது. மாணவர்கள் கல்வி மட்டுமல்லாமல் ஒழுக்கம் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். மாணவப்பருவம் என்பது இனிமையான எந்தவித கவலையும் இல்லாமல் பெற்றோர்களின் அரவணைப்பில் இருக்கும் காலமாகும். பெற்றோர்களுக்கு மாணவர்கள் எதையும் செய்யாவிட்டாலும் தன்னுடைய இன்னுயிரை காப்பாற்றிக்கொள்ளும் வகையிலும், பெற்றோர்கள், மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படாத வகையிலும் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை காண வேண்டும்.

அறிவுரை கூறுங்கள்

வளத்தி சத்யாபாலாஜி:-

பள்ளி- கல்லூரி மாணவர்கள் இன்று பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது மிகவும் வேதனையாக உள்ளது. சிலர் பஸ்சின் உட்புறம் இடமிருந்தும் அங்கு சென்று உட்காராமல் படிக்கட்டில் சாகசம் செய்து வருகின்றனர். சாலையில் உள்ள பள்ளங்கள், வேகத்தடையில் பஸ் ஏறி, இறங்கும்போது படிக்கட்டில் தொங்கியபடி செல்பவர்கள் கீழே விழுந்து அடிபடிவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் தற்போது நிகழ்ந்து வருகிறது. ஆசிரியர்களும், போலீசாரும் எவ்வளவோ எச்சரித்தும் சில மாணவர்கள் அதைக்கேட்பதில்லை. அரசும் குறிப்பிட்ட வழித்தடங்களில் பள்ளி நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். ஒரு சில பகுதிகளில் ஒரே ஒரு பஸ் மட்டும் செல்லும் நிலை உள்ளது. அப்போது பொதுமக்களும், மாணவர்களும் படிக்கட்டு மற்றும் பஸ்சின் மேற்கூரை ஆகியவற்றில் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்று படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை நினைத்துப்பார்க்க வேண்டும். நாம் இல்லாவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும்? என்பதை யோசிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு தகுந்த அறிவுரை கூறி பள்ளி- கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் பஸ் தேவை

செஞ்சி ஹரிநாத்:-

பஸ்சின் படிக்கட்டில் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள்தான் அதிகளவில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். அது ஆபத்து என்று தெரிந்திருந்தும் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் வசதி கேட்டு பலமுறை மாணவர்கள், போராட்டங்கள் நடத்தியும், மனுக்கள் கொடுத்தும் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏதாவது ஒரு பிரச்சினை நடந்தால் மட்டுமே அதற்கு தீர்வு காணப்படுகிறது. எனவே மாணவர்கள் ஆபத்தான பயணம், சாகச பயணம் மேற்கொள்வதை தடுக்க காலை, மாலை பள்ளி நேரங்களில் போதிய பஸ் வசதியை ஏற்படுத்தித்தருவது அதிகாரிகளின் கடமை. அதேநேரத்தில் பஸ்சிற்குள் அமருவதற்கு இருக்கைகள் இருந்தும் உள்ளே அமராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தால் அப்படிப்பட்ட மாணவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பதில் எந்தவித தயக்கமும் காட்டக்கூடாது.


Next Story