இலவச புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசிச்சென்ற மாணவர்கள்விழுப்புரம் அருகே பரபரப்பு


இலவச புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசிச்சென்ற மாணவர்கள்விழுப்புரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே இலவச புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசிச்சென்ற மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதுடன், இலவசமாக புத்தகப்பைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்த பைகள் தரமானதாக இருந்துள்ளது. இருப்பினும் இந்த புத்தகப்பைகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சிலர், அதனை அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்குள் வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த வாய்க்காலில் 10-க்கும் மேற்பட்ட புத்தகப்பைகள் கிடந்தது.

அதிர்ச்சி

இந்த புத்தகப்பைகள் வேண்டாமென்றால் அதனை பள்ளியிலேயே சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமே வழங்கியிருக்கலாம். அல்லது மற்ற ஏழை, எளிய மாணவர்கள் யாரிடமாவது கொடுத்திருந்தால் அவர்கள் அதன் மூலம் பயன்பெற்றிருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஒழுக்கமின்றியும், அடாவடியான முறையிலும் அரசு வழங்கும் புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அப்பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசிவிட்டு சென்ற மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசிச்சென்ற மாணவர்கள் யார், யார் என்று விசாரணை நடந்து வருகிறது. அவர்களை கண்டறிந்து தகுந்த அறிவுரைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

இலவச புத்தகப்பைகளை வாய்க்காலில், மாணவர்கள் வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story