மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் நீட் தேர்வு எழுதினர்


மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் நீட் தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 8 May 2023 1:00 AM IST (Updated: 8 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் மாவட்டத்தில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் நீட் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று இந்தியா முழுவதும் நடந்தது. சேலம் மாவட்டத்திலும் நேற்று தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 359 பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வசதியாக அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக்பள்ளி, மெய்யனூர் வித்யா மந்திர் பள்ளி, ஜாகீர் அம்மாபாளையம் செந்தில் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தேர்வு நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக தேர்வு எழுத நேற்று மதியம் 12 மணியில் இருந்தே மாணவ, மாணவிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த மையத்திற்கு வர தொடங்கினர். பின்னர் தேர்வு மையத்திற்கு வந்த மாணவ, மாணவிகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டனர்.

பலத்த பாதுகாப்பு

தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்டத்தில் நீட் தேர்வு பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் எத்தனை பேர் தேர்வு எழுத வரவில்லை என்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்ட போது, எந்தெந்த மையத்தில் எத்தனை பேர் வரவில்லை என்ற கணக்கெடுக்கும் பணி நள்ளிரவு வரை நடைபெறும்.

எனவே சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வு எத்தனை பேர் எழுதவில்லை என்பது நாளை (இன்று) காலை தான் தெரிய வரும் என்று கூறினார்.


Next Story