பாறை ஓவியங்களை வரலாற்று குழுவினர் ஆய்வு
ஐகுந்தம் பகுதியில் பாறை ஓவியங்களை வரலாற்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
பர்கூர்:
ஐகுந்தம் பகுதியில் பாறை ஓவியங்களை வரலாற்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
வரலாற்று குழுவினர் ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து பர்கூர் அருகே ஐகுந்தம் பகுதியில் பாறை ஓவியங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறார்கள். அப்போது அங்கு பாறை ஓவியம் இருப்பது தெரியவந்தது. இ்தை ஆய்வு குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
ஐகுந்தம் கொத்தப்பள்ளி சீங்கி கெட்டு என்ற இடத்தில் உள்ள அம்பட்டன் கெவி என்ற குகையில், 3 இடங்களில் வெள்ளை வர்ணத்தில் ஆன பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த குகை சுமார் 50 பேருக்கு மேல் தங்க கூடிய அளவில் பெரிதாக உள்ளது. முன்னால் சுனை ஒன்றும் உள்ளது. இது இரும்பு கால மனிதனின் வாழ்விடம் என்பதற்கான சான்றுகளாக கருப்பு, சிவப்பு பானை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் காணப்படுகின்றன. மேற்பரப்பில் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இடைக்கற்கால நுண் கற்கருவி கிடைத்துள்ளது. இது அகழாய்வுக்கு உகந்த இடமாகும்.
2 வளையங்கள்
இக்குகையில் 2 தொகுதிகளாக ஓவியங்கள் காணப்படுகின்றன. முதல் ஓவிய தொகுதியில் சுமார் 2 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் உயரத்தில் மனித உருவங்களும், விலங்கின் மீது மனித உருவங்களும் காணப்படுகின்றன. இந்த ஓவிய தொகுதியின் மையத்தில் ஒரு உருவம் உள்ளது. இந்த உருவம் செங்குத்தாக ஒரு கம்பை நட்டு பிறை நிலா போன்ற 2 வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு கீழே ஒரு விலங்கின் மீது மனிதன் காட்டப்பட்டு உள்ளார்.
விலங்கு ஒட்டகச்சிவிங்கி போன்று நீண்ட கழுத்தை கொண்டுள்ளது. இதற்கு இடதுபுறமாக இன்னொரு விலங்கின் மீது மனித உருவம் காணப்படுகிறது. இதற்கு மேல் ஒரு மனிதன் தன் கையில் குடம் போன்ற ஒரு பொருளை பிடித்துள்ளார். அருகே ஒரு விலங்கு படுத்திருப்பது போல் உள்ளது. இதற்கு மேல் பக்கம் ஒரு குதிரையின் மீது தலைவனும், தலைவியும் அமர்ந்திருப்பது போல் மிக அழகாக காட்டப்பட்டுள்ளது. குதிரையின் மீது அமர்வதற்கான சேனையும் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வரலாற்று ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர்.