சேலத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு


சேலத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
x

சேலத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

சேலம்

சேலம்:

சட்டமன்ற மதிப்பீட்டு குழு

சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நேற்று சேலம் வந்தனர். குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் உறுப்பினர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈஸ்வரன், எழிலரசன், செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், முகம்மது ஷாநவாஸ், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் சேலத்துக்கு வந்துள்ளனர்.

அவர்கள் நேற்று சேலம் மாநகரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் சேலம் அண்ணாபூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பூங்கா மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பள்ளப்பட்டி ஏரியை பார்வையிட்டனர்.

அப்போது அந்த பகுதி வார்டு கவுன்சிலர் சசிகலா ஏரியின் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் ஏரியையொட்டி உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே ஏரியின் மறுபுறத்தில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

வேளாண்மை விரிவாக்க மையம்

தொடர்ந்து சட்டமன்ற பேரவை குழுவினர் சீலநாயக்கன்பட்டியில் உள்ள உரக்கட்டுப்பாடு, பூச்சிக்கொல்லி மருந்து, உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள மண்பரிசோதனை, உயிர் உர உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினர். பின்னர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், சதாசிவம், மேயர் ராமச்சந்திரன், மதிப்பீட்டுக்குழு செயலாளர் சீனிவாசன், துணைச்செயலாளர் சிவகுமரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேச்சேரி

இதைத்தொடர்ந்து இக்குழுவினர் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு நடத்தினர். ஓமலூர்-மேச்சேரி சாலையை அகலப்படுத்தும் பணி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் கிராம சாலை திட்டப்பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேச்சேரி வேளாண்மை துறை அலுவலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான விவசாய இடுபொருட்கள் உள்பட நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் வழங்கினர். தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள். கூட்டத்தில் சதாசிவம் எம்.எல்.ஏ., மேச்சேரி அட்மா திட்டக்குழு தலைவர் சீனிவாசபெருமாள் மற்றும் விவசாயிகள் பேசும் போது, மேச்சேரி ஒன்றிய பகுதி முழுவதும் உள்ள ஏரிகளுக்கு மேட்டூர் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேச்சேரியில் உழவர்சந்தை அமைக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆய்வு கூட்டம்

இதையடுத்து மாலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அதன் மதிப்பீடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 62 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.78 ஆயிரத்து 850 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 99 ஆயிரத்து 777 மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களும் என மொத்தம் 70 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Next Story