ரூ.74¼ லட்சத்தில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு
திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.74¼ லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி பகுதிகளில் ரூ.74 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாதிரி பள்ளி
இதனை தொடர்ந்து பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.60 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரிப்பள்ளியாக உருவாக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
மேலும் இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளை கவரும் வகையில் வகுப்பறைகளை இணைத்து, சுவற்றில் ஏர் இந்தியா விமானம் படம் வரையப்பட்டு உள்ளதையும், வகுப்பு பாடங்கள் கார்ட்டூன் சித்திரங்களுடன் ஓவியமாக வரையப்பட்டு உள்ளதையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட், கிரிஜா, கோவிந்தன், மலர்விழி உள்பட பலர் உடன் இருந்தனர்.