வளர்ச்சி பணிகளை கலெக்டர் உமா ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
x

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக வேலகவுண்டம்பட்டி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருவதையும், ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் சமையற்கூடம் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியின் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கான கழிவறை சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

சமுதாய பண்ணை குட்டை

பின்னர் கூத்தம்பூண்டி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் அருந்ததியர் தெருவில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய பண்ணைக் குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த பணிகளை உரிய காலத்திற்குள் விரைவாக முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுடனான வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளில் முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story