ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்


தினத்தந்தி 8 Jun 2023 12:11 AM IST (Updated: 8 Jun 2023 11:04 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நரிக்குறவர், இந்து இருளர் இன மக்களுக்கு சான்றிதழ் மற்றும் பட்டா வழங்குதல், பள்ளி குழந்தைகளுக்கு அனைத்து சான்றிதழும் வழங்குதல், உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அல்லாத இடங்களை ஆய்வு செய்து உடனே பட்டா வழங்குதல், முதியோர் ஓய்வூதிய தொகை வழங்குதல் போன்றவற்றை உரிய காலவரையில் வழங்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தாசில்தார் அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் அலுவலகத்தின் தூய்மை ஆகியவற்றை பராமரிக்க தாசில்தாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

முன்னதாக ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுவந்தோண்டி கிராமத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மயான சாலை, சிறிய பாலம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அய்யனார் கோவில் சுற்றுச்சுவர், கான்கிரீட் சாலை, அங்கன்வாடி கட்டிடம் பணி உள்ளிட்ட பணிகளையும், கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம், முத்துச்சேர்வா மடத்தில் ரூ.53 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 3 வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தில் ரேஷன் கடையிலும் திடீர் சோதனை நடத்தினார். கட்டிட பணி, சாலை பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தபோது பணிகளை விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக முடித்திட வேண்டும் என கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் குமார், முருகன், ஒன்றிய பொறியாளர்கள் நடராஜன், குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story