குறுவை சாகுபடி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
தஞ்சையில், குறுவை சாகுபடி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் 3 அமைச்சர்கள் மற்றும் 7 மாவட்ட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில், குறுவை சாகுபடி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் 3 அமைச்சர்கள் மற்றும் 7 மாவட்ட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இ்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், வேளாண்மைத்துறை ஆணையர் சுப்பிரமணியன், சர்க்கரைத்துறை ஆணையர் விஜயராஜ்குமார், நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வரவேற்றார்.
தூர்வாரும் பணிகள்
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசியதாவது:-
குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு என்னென்ன தேவைகள், விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்து அதனை தீர்த்து வைக்கும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு முன்பாக ஆய்வு கூட்டம் விவசாயிகளை கொண்டு நடத்தப்பட்டது. அதன்படி தற்போது 3-வது ஆண்டாக கூட்டம் நடைபெறுகிறது.
வருகிற 12-ந் தேதி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி டெல்டா மாவட்டங்களில் ரூ.92 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நீர்வள ஆதாரத்துறை மூலமும், ரூ.5 கோடி மதிப்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலமும் நடந்து வருகிறது. குறித்த பருவத்தில் குறுவை சாகுபடி தொடங்கப்பட உள்ளதால் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே தொடங்கப்படும்.
விதை, உரம் இருப்பு
குறுவை சாகுபடிக்கான நெல் விதைகள், உரங்கள், இடு பொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நெல் நடவு எந்திரங்களை கொண்டு விரைவாக நடவு பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்டா பகுதிக்கு குறுவை நெல் சாகுபடிக்கு 7,812 டன் நெல் விதைகள் தேவைப்படுகிறது.
இதுவரை 4,045 டன் விதைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. மேலும் 634 டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களிலும், 3412 டன் விதைகள் தனியார் விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடிக்கு 1.07 லட்சம் டன் உரம் தேவை. 78 ஆயிரம் டன் உரம் தற்போது இருப்பு உள்ளது. 972 நெல் நடவு எந்திரங்கள் மூலம் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீர் விரைவில் சென்றடையும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், தாட்கோ தலைவர் மதிவாணன், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், பூண்டி கலைவாணன், அண்ணாதுரை, அசோக்குமார், நிவேதா முருகன், முகமது ஷாநாவாஸ், நாகை மாலி, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, கும்பகோணம் துணை மேயர் சுப.தமிழழகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா நன்றி கூறினார்.