செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப்பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், திருமுடிவாக்கம் தொழில்துறை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு, குடியிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்கள், குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பன்றிகளை அப்புறப்படுத்துவது

அப்போது, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு, பன்றிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் வனத்துறையுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட சிறப்பு கடன் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை வரை உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். திருமழிசை தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், திருமழிசை தொழிற்பேட்டையில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வசதி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

நிறைவேற்றி தருவதாக உறுதி

ஆதம்பாக்கம் மற்றும் நங்கநல்லூர் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பட்டா வழங்குவது தொடர்பாகவும், ஆதம்பாக்கம் ஏரியை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. மேலும், திருத்தணி-குறிஞ்சி செங்கல் சூளை குழு மற்றும் திருவள்ளூர்-எம்ராய்டரி தொழில் குழுவினர் உள்பட பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story