மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சியில் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் பேசுகையில், இந்த 2 திட்டத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக 3,067 பேருக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 31 ஆயிரத்து 997 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அல்லாதோர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் காப்பீட்டுத்திட்ட மையத்தில் பதிவு செய்து மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறலாம். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் 22 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். .மேலும் மருத்துவமனைகளில் காப்பீடு குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் செந்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், மாவட்ட கருவூல அலுவலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.