விஷம் குடித்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை


விஷம் குடித்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
x

சுரண்டையில் விஷம் குடித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்டார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி (வயது 55). இவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மணிமேகலை (48). இவர்களுக்கு விக்னேஷ் (29), வினித் (27) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

அவர்களில் விக்னேஷ் என்ஜினீயரிங் பட்டதாரியாக உள்ளார். வினித் தென்காசி ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

பசுபதி குடும்பத்தினருடன் சுரண்டை நகராட்சிக்குட்பட்ட கீழச்சுரண்டை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார்.

பரிதாப சாவு

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பசுபதி, வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து சுரண்டை போலீசார், ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் பசுபதி பரிதாபமாக இறந்தார்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

பசுபதியின் சாவு குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், "அவருக்கு நீரிழிவு நோய் காரணமாக காலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் இருந்ததாகவும், கடந்த சில வாரங்களாக பணியிடத்தில் ஏற்பட்ட பணிச்சுமையால் மிகவும் மன அழுத்தத்துடன் காணப்பட்டார்" என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story