சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 4,643 பேர் எழுதினர்
தஞ்சையில் 4 மையங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 4,643 பேர் எழுதினர். 981 பேர் வரவில்லை.
தஞ்சையில் 4 மையங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 4,643 பேர் எழுதினர். 981 பேர் வரவில்லை.
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு
தமிழக போலீஸ்துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வை எழுத விரும்பிய இளைஞர்கள் தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தனர். நேற்று சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடந்தது.தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆகிய 4 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுஅறிவு தேர்வு நடந்தது. பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தேர்வு நடைபெற்றது.
செல்போனுக்கு தடை
இந்த தேர்வு எழுத 5,624 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களில் 981 பேர் பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. 4,643 பேர் தேர்வு எழுதினர். தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, பிரிஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெண்களுக்காக தனி மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்தவர்களில் அடையாள அட்டை, அனுமதி கடிதம் இருந்தவர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.செல்போன், கைப்பை உள்ளிட்டவைகள் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இவைகளை வைத்துவிட்டு செல்வதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கே பணியில் இருந்த போலீசாரிடம் செல்போன், கைப்பைகளை தேர்வு எழுத வந்தவர்கள் கொடுத்துவிட்டு சென்றனர். ஒவ்வொரு செல்போன், கைப்பைகளுக்கு தனித்தனி எண்கள் வழங்கப்பட்டன. தேர்வு எழுதிவிட்டு வந்து அந்த எண்ணை கூறி செல்போன், கைப்பைகளை பெற்று சென்றனர்.
ஆய்வு
4 தேர்வு மையங்களுக்கும் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த தேர்வில் போலீஸ்துறையினருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. போலீஸ்துறையில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 672 பேர் எழுதுகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரம் பேரில் 1,608 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 392 பேர் தேர்வு எழுதவில்லை. பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 1,861 பேரில் 1,551 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 310 பேர் தேர்வு எழுதவில்லை. பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் 1,070 பேரில் 901 பேர் தேர்வு எழுதினர். 169 பேர் தேர்வு எழுதவில்லை. குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 693 பேரில் 583 பேர் தேர்வு எழுதினர்.