சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்


சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்
x

விருதுநகரில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் ஒரு போலீஸ் நிலையத்தில் வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக மதுரையை சேர்ந்த 28 வயது பெண் இந்த மாதம் பணியில் சேர்ந்துள்ளார். இவர் போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் வழக்கு பதிவு விவரங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியிடம் அளித்துள்ள புகாரில், ஆவியூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வீரணன் மற்றும் போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாக கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மனோகர் புகாருக்குள்ளான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகிய 2 பேரையும் உடனடியாக ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மனோகர் கூறுகையில், அந்த பெண் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் 2 பேரும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அரசு விதிமுறைப்படி விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story