தி.மு.க.வில் இருந்து வெளியேறும் முடிவில் சுப்புலட்சுமி ஜெகதீசன்? கட்சியினரே தொடர்ந்து துரோகம் செய்வதாக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
கட்சியினரே தொடர்ந்து துரோகம் செய்வதாக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
தி.மு.க. துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அந்த கட்சியில் இருந்து வெளியேறும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியினரே தொடர்ந்து அவருக்கு துரோகம் செய்வதாக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுப்புலட்சுமி ஜெகதீசன்
தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினமா செய்ததாக தகவல்கள் பரவின.
நேற்று சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
தேர்தல் தோல்வி
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் களம் இறக்கப்பட்டார். தேர்தலில் அவர் 206 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் சி.சரஸ்வதி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த தோல்விக்கு மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த 2 ஒன்றியங்களின் தி.மு.க. செயலாளர்கள்தான் காரணம் என்று அவர் கட்சி தலைமையிடம் குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி, அவர்களின் பொறுப்புகளையும் நிறுத்திவைத்தார்.
சமூக ஊடக பதிவுகள்
இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக ஊடகங்களில் சில கருத்துகளை பகிர்ந்து வந்தார்.
குறிப்பாக, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. தலைமை மற்றும் தி.மு.க.வின் பல நிர்வாகிகள் தங்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்ததாக அந்த பதிவுகள் இருக்கும். ஆனால், அவற்றை கட்சியினரே பெரிது படுத்தாமல் கடந்து சென்றனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைமையை கொச்சைப்படுத்தி சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு பதிவினை வெளியிட்டார். அதில் மொடக்குறிச்சி தொகுதி தோல்வியே முக்கியமானதாக இருந்தது.
கடந்த 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வெளியிட்ட பதிவு கட்சினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில்தான் தி.மு.க.வை விட்டு சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின.
துரோகம்
இதுபற்றி அவரது நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:-
தி.மு.க.வை விட்டு சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறும் முடிவில் இருப்பது உண்மைதான். தொடர்ந்து அவர் கட்சியினரால் துரோகத்துக்கு ஆளாகி இருக்கிறார். அவர் யாருக்கு பதவி அளிக்கக்கூடாது என்று நிறுத்தி வைத்திருந்தாரோ, அவர்களுக்கு உள்கட்சி தேர்தல் என்ற பெயரில் பதவியை மீண்டும் வழங்கி இருக்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வில் இருந்து கொண்டே பலரும் பா.ஜனதாவுக்கு வேலை பார்த்தார்கள்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றால், சபாநாயகர் அல்லது முக்கிய அமைச்சர் பதவிக்கு வருவார் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அப்படி அவர் பதவிக்கு வந்தால், ஈரோடு மாவட்டத்தில் இரட்டை தலைமை பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று திட்டமிட்டு ஒரு குழுவினர் துரோகம் செய்தனர்.
அவரது பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்தில் எப்படி இருப்பார். ஆனால் ராஜ்யசபை எம்.பி. பதவியை எல்லாம் அவர் எதிர்பார்க்கவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புகொள்ள முடியவில்லை
இதுகுறித்து உறுதி செய்ய முயன்றபோது சுப்புலட்சுமி ஜெகதீசனை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. நேற்று காலையில் இருந்து பத்திரிகையாளர்களின் முயற்சிக்கு எந்த பதிலும் இல்லை. அவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சுப்புலட்சுமி ஜெகதீசன் விவகாரம் கட்சியினருக்கு கூட சற்று குழப்பமான விஷயமாகவே உள்ளது.