சுபாஷ் சந்திர கபூரின் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பேட்டி
“சிலை கடத்தல் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூரின் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது” என்று நெல்லையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. தினகரன் கூறினார்.
"சிலை கடத்தல் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூரின் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது" என்று நெல்லையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. தினகரன் கூறினார்.
நெல்லையில் ஐ.ஜி. ஆய்வு
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. தினகரன் நேற்று நெல்லைக்கு வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்தார். அப்போது சிலைகளை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சிலைகள் மீட்பு
பின்னர் ஐ.ஜி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டு தற்போது சிலை கடத்தல் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கு போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 43 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து சாமி சிலைகள் மற்றும் கலை அலங்கார பொருட்கள் என ெமாத்தம் 199 எண்ணங்கள் மீட்கப்பட்டு உள்ளது.
மேலும் வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் 60-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உள்ளன. அமெரிக்காவில் 37 சிலைகளும், சிங்கப்பூரில் 15 சிலைகளும், சில சிலைகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது. இதனை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவில்கள் தோறும் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அறையில் இருந்து வெளியே செல்லும்போது ஒவ்வொரு சிலைக்கும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தி அதன் நகர்வுகள் முழுமையாக கண்காணிக்கப்படும்
சுபாஷ் சந்திர கபூர் வழக்கு
சிலை கடத்தல் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூரின் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 வாய்தாக்களில் வழக்குகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.