போலீஸ் நிலையங்களில் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸ் சூப்பிரண்டிடம் பாதிக்கப்பட்ட 11 பேர் புகார்
போலீஸ் நிலையங்களில் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸ் சூப்பிரண்டிடம் பாதிக்கப்பட்ட 11 பேர் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாளில், போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் பாதிக்கப்பட்ட 11 பேர் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழ்நாடு போலீஸ்துறை டி.ஜி.பி. உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் போலீஸ் துறை தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது.
இந்த வகையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக்தில் போலீஸ்துறை தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. .
இந்த கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை கொடுக்க தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர்.
பொதுமக்கள் புகார்
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தும், தங்களுக்கு நிவாரணம் கோரியும் 11 பேர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனுக்கள் அளித்தனர்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் புதிதாக கோரிக்கை மனுக்கள் கொடுத்த 54 பேரிடம் விசாரணை நடத்திய அவர், சம்மந்ப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.