ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்
நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாய நிலம்
தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் 2022-23-ம் நிதியாண்டில் 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் விவசாயநிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ளநிலமற்ற ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 3 நபர்களுக்கு ரூ.15 லட்சம் மானியமும், நிலமற்ற பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சம் மானியமும் என மொத்தம் 4 நபர்களுக்கு ரூ.20 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலம்
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும். மேலும் மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்கவேண்டும். விவசாய கூலிவேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது.
ஒருவர் ஒருமுறைமட்டுமே மானியம் பெறதகுதியுடையவர்கள். இந்த திட்டத்தின் கீழ் நிலம் வாங்கும் போது பின்வரும் நிபந்தனைகள் பின்பற்றப்படவேண்டும். வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்யவேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதபிற இனத்தைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். இத்திட்டத்தின் கீழ் நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சைநிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சைநிலம் வாங்கலாம்.
10 ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது
சார் பதிவாளர் அலுவலக இணையதளம் வாயிலாக அல்லது நேரில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு பெறப்படவேண்டும். நிலத்தின் சந்தைமதிப்பீட்டின் படி, திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு விற்பனைசெய்யக்கூடாது.மேலும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள் www.tahdco.om என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04365-250305 மற்றும் 9445029478 என்ற எண்ணிலோ அல்லது நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.