ரூ.50 லட்சம் வரை மானியம்: கால்நடை பெருக்கத்தில் பங்குபெற தொழில்முனைவோருக்கு வாய்ப்பு
கால்நடை பெருக்கம் தொடர்பான தொழிலில் பங்குபெற தொழில் முனைவோருக்கு மானியத்துடன் வாய்ப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை,
தேசிய கால்நடை இயக்கத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் நோக்கமானது, புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலாகும்.
ரூ.50 லட்சம் மானியம்
இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் ஆயிரம் நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழியாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து 4 வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.
ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் மற்றும் 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.
பன்றி வளர்ப்பு
பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் மற்றும் 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும்.
தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஓராண்டில் 2 ஆயிரம் முதல் 2,400 மெட்ரிக் டன் வைக்கோல், ஊறுகாய் புல், ஒரு நாளில் 30 டன் மொத்த கலப்பு தீவனம், தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.
யார் பயன்பெறலாம்?
இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவர். முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.
தொழில்முனைவோர், தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தையும் பெற வேண்டும்.
பயன் பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின்படி கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும்.
விவரங்களை அறிய...
பின்னர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் 2 தவணைகளில் வழங்கப்படும். திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை,
https://nlm.udyamimitra.in/ ;
http://www.tenders.tn.gov.in/innerpage.asp?choice=tc5-amp; tid=tnl202901-amp;work=1 ;
ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களை அறிய அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் சென்னை, தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
கால்நடைகள் சார்ந்த தொழில் மேற்கொள்ள முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்று கால்நடை பெருக்கத்தில் பங்குபெற்று பயன் பெறுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.