'தினத்தந்தி'-எக்ஸல் குழும கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி:'தன்னம்பிக்கையுடன் பிடித்த துறையை தேர்வு செய்ய வேண்டும்';மாணவர்கள் மத்தியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பேச்சு
சுயமாக சிந்தித்து தன்னம்பிக்கையுடன் தங்களுக்கு பிடித்த துறையை மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி'யும், குமாரபாளையம் எக்ஸல் குழும கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பேசினார்.
சுயமாக சிந்தித்து தன்னம்பிக்கையுடன் தங்களுக்கு பிடித்த துறையை மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி'யும், குமாரபாளையம் எக்ஸல் குழும கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பேசினார்.
'வெற்றி நிச்சயம்'
பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவ- மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்பதை அவர்களே அறிந்து கொள்வதற்கு வசதியாக 'வெற்றி நிச்சயம்' என்ற சிறப்புமிக்க வழிகாட்டுதல் நிகழ்ச்சியை 'தினத்தந்தி' நாளிதழ் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
20-வது ஆண்டாக தற்போது இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. அதன்படி ஈரோட்டில் 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகள் மத்தியில் பேசியதாவது:-
மகிழ்ச்சி
'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சியை, சிறப்பான முறையில் தொடங்கி இருக்கிறோம். உயர் கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளை வழிநடத்தும் இதுபோன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அதில் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இன்டர்நெட் வழியாக அனைத்து தகவல்களும் கிடைத்தாலும் நேரடியாக ஒரு நிபுணர் கூறுவதை கேட்கும்போது தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
உங்களுக்கு பிடித்த துறை குறித்து 10-ம் வகுப்பில் இருந்தே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களில் பலருக்கும் வேறு திறமைகள் இருக்கும். நீங்கள் எந்த பாதையை தேர்ந்து எடுத்தாலும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பிடித்த துறைக்கு சென்றால் மட்டுமே உற்சாகமாக படிக்கவோ, வேலை செய்யவோ முடியும். நீங்கள் 'எக்ஸல்'- ஆக, அதாவது சிறந்து விளங்க வேண்டும் என்றால் பிடித்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தன்னம்பிக்கை
முதலில் தன்னம்பிக்கை வேண்டும். உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். உங்களின் ஆர்வத்தை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த துறையை தேர்ந்து எடுத்தாலும் அதில் கண்டிப்பாக சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிலையான ஒரு வேலை, நல்ல சம்பளம் கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கும் படிப்பில், பணியில் சிறந்தவர்களாக வரவேண்டும். இதற்கு உங்களுக்கு எந்த துறை பிடிக்கும் என்பதை சுயமாக சிந்தித்து, தன்னம்பிக்கையுடன் முடிவு செய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தில் நிறைய வழிகாட்டுதல்கள் தருகிறார்கள் அவற்றையும் அறிந்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பேசினார்.
கல்விப்பணியில் 'தினத்தந்தி' என்ற தலைப்பில் 'தினத்தந்தி' தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ர.தனஞ்செயன் பேசினார்.
நுழைவுத்தேர்வு
மருத்துவ துறை மற்றும் நீட் நுழைவுத்தேர்வு குறித்து குமாரபாளையம் எக்ஸல் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி முதல்வர் கே.விபாஸ், பொறியியல் துறை குறித்து எக்ஸல் என்ஜினீயரிங் கல்லூரி (தன்னாட்சி) நிர்வாக இயக்குனர் கே.பொம்மண்ணராஜா, போட்டித்தேர்வுகள், வேலைவாய்ப்புகள் குறித்து கோவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை துணை இயக்குனர் எம்.கருணாகரன் ஆகியோர் பேசினர். கல்விப்பணியில் எக்ஸல் கல்லூரிகள் என்ற தலைப்பில் எக்ஸல் கல்வி நிறுவனங்கள், மேச்சேரி தி காவேரி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் என்.மதன் கார்த்திக், சட்டத்துறை குறித்து சேலத்தை சேர்ந்த சட்ட கல்வியாளர் வக்கீல் பி.ஆர்.ஜெயராஜன், பட்டய கணக்கியல் துறை குறித்து மதுரையை சேர்ந்த சார்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணி ஆகியோர் பேசினார்கள். மேலும் குமாரபாளையம் எக்ஸல் பிசியோதெரபி அன்டு சுகாதார அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.அய்யப்பன், எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் எம்.ஸ்ரீகாந்த். எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் ஆர்.விமல் நிஷாந்த் ஆகியோர் பேசினர்.
முன்னதாக எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில் நுட்ப இயக்குனர் என்.செங்கோட்டையன் வரவேற்றார். நிகழ்ச்சியை மதுரையை சேர்ந்த புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார். முடிவில் ஈரோடு 'தினத்தந்தி' செய்தி ஆசிரியர் சி.சேர்மன் சிவராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி கலைமாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எழுதுவதற்கு ஒரு பேனா, பேடு ஆகியவற்றுடன் அழகிய போல்டர் இலவசமாக வழங்கப்பட்டது. மதியம் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. உணவு இடைவேளையின் போது நன்னிலம் கேசவனின் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.