மத்திய மந்திரியின் வருகைக்காக அண்ணாமலையின் நடைபயணத்தில் திடீர் மாற்றம்
மத்திய மந்திரியின் வருகைக்காக அண்ணாமலையின் நடைபயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையிலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை ராமேசுவரத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
நடைபயணத்தின்போது மக்களை சந்திக்கும் அண்ணாமலை, அவர்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கிக் கொண்டு, அதனை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். நடைபயணத்தின்போது அவ்வப்போது ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
மாற்றம்
அண்ணாமலையின் நடைபயணத்தில் திடீரென சில மாற்றங்களை பா.ஜ.க. செய்துள்ளது. அதன்படி, 8-ந்தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலத்தில் நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனால் இந்த பகுதிகளில் நேற்று முன்தினம் ஏற்கனவே அண்ணாமலை நடைபயணம் சென்றுவிட்டார்.
மதுரையில் நேற்று காலையில் நடைபயணமும், மாலையில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்றைய நடைபயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபயணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நடைபயணத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் 2 நாட்களுக்கு பின்னர் நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்க இருக்கிறார்.
திருச்சுழியில் நாளை...
இதுகுறித்து 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் இணை பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி கூறியதாவது:-
நடை பயணத்தின் இடையே எங்களுக்கும் சற்று ஓய்வு தேவைப்படுகிறது. அதனால், கூடுதலாக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டோம். நாளை திருச்சுழியில் நடைபயணம் தொடங்கும். தொடர்ந்து, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டியில் மாநில தலைவர் நடை பயணம் செல்வார்.
மதுரையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, சங்கரன்கோவிலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நெல்லையில் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் ஆகியோர் அண்ணாமலையின் நடை பயணத்தில் பங்கேற்கின்றனர். மதுரையில் நடைபெறும் நடைபயணத்தில் 5 கி.மீ. தூரம் மன்சுக் மாண்டவியா நடக்கிறார். அப்போது, மக்களிடம் மன்சுக் மாண்டவியா உரையாற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றி அமைக்கப்பட்டது ஏன்?
மதுரை பொதுக்கூட்டத்தின்போது, அங்கு அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடர்பான விவரங்களை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா புள்ளி விவரத்துடன் பேச இருக்கிறார். எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை பற்றி பேசுவதற்கு பொருத்தமானவர் மன்சுக் மாண்டவியாதான், அதனால்தான் அவருடைய வருகைக்காக நடை பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.