ஊட்டி அருகே 10 வீடுகளில் திடீர் விரிசல் -நில அதிர்வா? பொதுமக்கள் அச்சம்


ஊட்டி அருகே 10 வீடுகளில் திடீர் விரிசல் -நில அதிர்வா? பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே 10 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் நில அதிர்வு ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே 10 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் நில அதிர்வு ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

10 வீடுகளில் விரிசல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கோக்குடல் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 30 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சுமார் 10 வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

இதை மறுநாள் காலையில் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒவ்வொருவரும் பல காரணங்கள் கூறியதால் பொதுமக்கள் கூடுதல் பீதி அடைந்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

நில அதிர்வா?

நேற்று முன்தினம் இரவு நிலஅதிர்வு ஏற்பட்டதால்தான் இந்த விரிசல் உண்டாயிருக்கிறது. குறைந்த அளவு நில அதிர்வாக இருந்ததால் யாரும் உணராமல் இருந்திருக்கலாம். இதன்மூலம் வீடுகள், சமுதாயக்கூடம் உள்பட 10 கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்த கிராமத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 6 மாதத்திற்கு முன் இதே பகுதியில் சாலையோரம் பிளவு ஏற்பட்டது. மேலும் 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து புவியியல் துறை இணை இயக்குனர் (பொறுப்பு) உத்தரவின் பேரில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அதிக மழை பொழிவு

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த பகுதி நில அதிர்வால் பாதிக்கப்படக்கூடிய மண்டலம் கிடையாது. சமீபத்தில் பெய்த அதிக மழை பொழிவு காரணமாக அருகில் உள்ள மலையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் சில நேரங்களில் பூமிக்கு மேலேயும் சில நேரங்களில் ஊடுருவல் மூலம் பூமிக்கு கீழேயும் செல்லும். அவ்வாறு அதிக அளவு தண்ணீர் சென்றபோது ஏற்பட்ட லேசான அதிர்வால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பில்லர் அமைத்துக் கட்டிய வீடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் பில்லர் அமைக்காமல் கட்டப்பட்ட பழங்காலத்து வீடுகளில் மட்டும் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமம் இருக்கும் பகுதியில் தண்ணீர் சரியாக செல்லக்கூடிய வகையில் பாதாள சாக்கடை அமைத்து விட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்றனர்.


Next Story