துப்புரவு பணியாளர் திடீர் சாவு: இழப்பீடு வழங்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம் பெண்ணாடத்தில் பரபரப்பு
பெண்ணாடத்தில் இறந்த துப்புரவு பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் சோழநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 40). இவர் பெண்ணாடம் பேரூராட்சியில் சுமார் 19 ஆண்டுகளாக தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ந்தேதி பெண்ணாடம் சிலுப்பனூர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
இந்த நிலையில் பாபு இறந்தது பற்றி அறிந்த துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இறந்த பாபுவின் குடும்பத்திற்கு பேரூராட்சி சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அமைச்சர் ஆறுதல்
இந்த நிலையில் இறந்த பாபுவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்திற்கு அமைச்சர் சி.வெ.கணேசன், வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாபுவின் மனைவி தீபா மற்றும் உறவினர்கள் பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் சி.வெ.கணேசன், பாபுவின் வீட்டிற்கு சென்று அவருடைய தாய் விஜயாவை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் பாபுவின் மனைவி தீபாவுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருந்த பாபுவின் மனைவி தீபா, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழழகன், 4-வது வார்டு கவுன்சிலர் திராவிடச்செல்வி மற்றும் உறவினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் பேரூராட்சி அலுவலகம் வராததை கண்டித்தும், தீபாவுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
50 பேர் கைது
இந்த தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.