சிறப்பு முகாம் அகதிகள் கோர்ட்டு வளாகத்தில் திடீர் தர்ணா


சிறப்பு முகாம் அகதிகள் கோர்ட்டு வளாகத்தில் திடீர் தர்ணா
x

சிறப்பு முகாம் அகதிகள் கோர்ட்டு வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு போதைப்பொருள் கடத்தல், போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் 153 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன்கள், மடிக்கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்கக்கோரி சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக அகதிகள் 11 பேரை முகாமில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.அப்போது அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தங்களை பல ஆண்டுகளாக முகாமில் அடைத்து வைத்துள்ளார்கள். எங்கள் குடும்பத்தினரிடம் பேசுவதற்கும், வழக்கு தொடர்பாக வக்கீலிடம் பேசுவதற்கும் செல்போன்களை பயன்படுத்தி வந்தோம். தற்போது அவற்றை பறிமுதல் செய்து கொண்டார்கள்.பறிமுதல் செய்ததற்கு ரசீது கூட வழங்கவில்லை. ரசீது கொடுத்தால் கோர்ட்டில் காண்பித்து எங்களது பொருட்களை பெற்றுக்கொள்வோம். தற்போது அதற்கும் வழியில்லை என்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் மீண்டும் அழைத்து சென்று சிறப்பு முகாமில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story