தாலுகா அலுவலகத்தில் திடீர் நில அதிர்வு?
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு டைல்ஸ்கள் பெயர்ந்ததால் வருவாய்த் துறையினர் அலறியடித்து வெளியேறினர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு டைல்ஸ்கள் பெயர்ந்ததால் வருவாய்த் துறையினர் அலறியடித்து வெளியேறினர்.
டைல்ஸ்கள் பெயர்ந்தன
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள தாலுகா அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. கீழ்தளம் மற்றும் முதல்தளத்துடன் கூடிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகம் முழுவதும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 4.55 மணி அளவில் முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் திடீரென வெடிசத்தம் போன்று ஏற்பட்டு தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் பெயர்ந்தன.
இதனால் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 2 தளங்களில் இருந்தும் பீதியுடன் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
நில அதிர்வு?
சென்னையில் இன்று பகலில் ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இங்கும் நில அதிர்வு ஏற்பட்டு இருக்குமோ? என வருவாய்த்துறையினர் அச்சத்துடன் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினால் தான் என்ன காரணத்தினால் டைல்ஸ்கள் பெயர்ந்தது என்பது தெரியவரும். இச்சம்பவம் அனைவரிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் தாசில்தார் சாப்ஜான் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் இதற்கான காரணம் என்ன என்பது பின்னர் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.