தனியார் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்துநெய்வேலி அருகே பரபரப்பு
நெய்வேலி அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கம்மாபுரம்,
நெய்வேலி அருகே உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இருந்து நிலக்கரிகளை வாங்கி, அதில் இருந்து மின் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அனல் மின் நிலையத்தில் இருந்த பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பரபரப்பு
இதுபற்றி தகவல் அறிந்த அதே நிறுவனத்தில் உள்ள தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அந்த நேரத்தில் அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.