சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து


சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து
x

சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனை அருகே சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதறியடித்து கீழே குதித்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு லோக்மானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12164) இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் நேற்று மாலை 6.20 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்டது. ரெயில் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே பேசின்பிரிட்ஜ் பணிமனை வந்தது. பணிமனையை தாண்டி செல்லும்போது (வியாசர்பாடி ரெயில் நிலையம் வரும்போது), ரெயிலின் என்ஜின் மற்றும் முதல் பெட்டியான ஏ.சி. பெட்டிக்கிடையே உள்ள மின் இணைப்பு கம்பியில் இருந்து திடீர் தீப்பொறி கிளம்பியது.

இதனை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, தீப்பொறி கிளம்பிய இடத்தில் திடீரென கரும்புகை வெளியேற தொடங்கியது. அடுத்தடுத்த வினாடிகளில் கரும்புகை குபுகுபுவென பரவியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள், ரெயில்வே ஊழியர்கள் பார்த்து சத்தம் போட்டனர்.

ரெயில் நிறுத்தம்

விபரீதம் ஏற்பட்டதை உணர்ந்த என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். அதேவேளை கரும்புகையின் அளவு அதிகரிக்க தொடங்கியது.

திடீரென ரெயில் நிற்பதையும், ரெயிலில் இருந்து கரும்புகை வெளியேறுவதையும் கதவு-ஜன்னல் வழியாக இருந்து பார்த்த பயணிகள் வெலவெலத்து போனார்கள்.

'அய்யய்யோ... ரெயில் தீப்பிடிச்சு எரியுதே... எல்லோரும் ஓடுங்க...' என்று சிலர் சத்தம் போட்டனர். இதனால் ரெயிலில் இருந்த மொத்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். ஒடிசா ரெயில் விபத்து குறித்து கேள்விப்பட்டதால் பயணிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போனார்கள்.

குதித்து ஓடிய பயணிகள்

இந்த நிலையில் கரும்புகை வெளியேறிய இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென எரியும் தீ நிலைமையை இன்னும் கவலைக்குள்ளாக்கியது. இதனால் ஒட்டுமொத்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

எப்படியாவது ரெயிலில் இருந்து இறங்கினால் போதும் என கையில் கிடைத்த உடைமைகளுடனும், குழந்தை-குட்டிகளுடனும் கலவரம் நிறைந்த கண்களாய் வெளியேற பதற்றத்துடன் ஆயத்தமானார்கள்.

'இதுக்குமேல தாமதம் கூடாது, குதிக்க வேண்டியதுதான்' என்று எண்ணி பயணிகள் சிலர் ஜன்னல் வழியாக (அவசர கால வழி) கீழே குதித்தனர். படிக்கட்டுகள் வழியாகவும் பயணிகள் சிலர் அவசர கதியில் இறங்கி கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் மறுமார்க்கத்தில் வந்து கொண்டிருந்த (சென்டிரல் நோக்கி) மின்சார ரெயிலும் உடனடியாக நிறுத்தப்பட்டது. அந்த ரெயிலில் இருந்தும் பயணிகள் இறங்கி, எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்து குவிய தொடங்கினார்கள். சிலர் ரெயில் வெடித்துவிடுமோ... என்று பயந்து பல அடி தூரம் தள்ளியிருந்து நிலைமையை கண்காணித்தபடி இருந்தனர். இதனால் அந்த இடமே களேபரமாக காட்சியளித்தது.

டிரைவரின் சாமர்த்தியம்

இதையடுத்து ரெயில் டிரைவர், என்ஜினில் இருந்து கீழே இறங்கி தீப்பிடித்து எரிந்த இடத்தை பார்த்தார். பொதுவாக சில தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்போது, என்ஜினை 'ஆப்' செய்து 'ஆன்' செய்தாலே பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

அந்த யோசனை மனதில் உதிக்கவே, உடனடியாக என்ஜினை 'ஆப்' செய்து 'ஆன்' செய்தார். இதையடுத்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீ உடனடியாக அணைந்து போனது. இதனால் அங்கு நிம்மதி பெருமூச்சு விடும் நிலை உருவானது.

அதேவேளை பணிமனை தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். என்ஜின் - ஏ.சி. பெட்டி இடையே செல்லும் மின் வயரில் ஏற்பட்ட உராய்வே தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவித்த அவர்கள், மேற்கொண்டு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து டிரைவர், ரெயிலை இயக்க சம்மதித்தார். பயணிகளும் ஒருவித கலவரத்துடனேயே ரெயிலில் ஏற தொடங்கினார்.

நிம்மதி பெருமூச்சு

சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு அதாவது இரவு 7.15 மணிக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. என்னதான் பிரச்சினை தீர்ந்து ரெயில் இயக்கப்பட்டாலும், பயணிகள் ஒருவித அதிர்ச்சியுடனேயே பயணித்தனர். அதேவேளை தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் பிரச்சினை தீர்ந்து ரெயில் புறப்பட்டிருந்தது. இருந்தாலும் பயணிகளுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை என்ற நிம்மதி பெருமூச்சுடன் அவர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.

தொடர்ந்து ரெயில் விபத்துகளும், ரெயில் தடம்புரளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வரும் சமீபகால நாட்களில், நேற்று நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ரெயில் புறப்பட்ட 40 நிமிடங்களுக்குள் வேறு எந்த ரெயில்களும் அந்த வழித்தடத்தில் இயக்கப்படாததால் இதர ரெயில்கள் புறப்படுவதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ரெயில்வே விளக்கம்

ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே நேற்று இரவு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது.

அதில், 'மாலை 6.50 மணியளவில் வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது என்ஜினுக்கும், பயணிகள் பெட்டிக்கும் இடையேயான 'எச்.ஓ.ஜி. கப்ளிங்' இணைப்பில் தீ எதுவும் பரவவில்லை. வெறும் கரும்புகை மட்டுமே வெளியாகி இருக்கிறது. உடனடியாக இப்பிரச்சினை சரிசெய்யப்பட்டு ரெயில் இயக்கப்பட்டது', என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story