சென்னை மருத்துவக்கல்லூரி விடுதியில் திடீர் தீ விபத்து


சென்னை மருத்துவக்கல்லூரி விடுதியில் திடீர் தீ விபத்து
x

சென்னை மருத்துவக்கல்லூரி விடுதி வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள சென்னை மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதி வளாகத்தில் ஜெனரேட்டர் அறை உள்ளது. இந்த அறையில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அறையில் இருந்து தீப்பிடித்து புகையாக கிளம்பியது.

இதனால் அந்த வழியாக சென்றவர்கள் மருத்துவக்கல்லூரியில்தான் ஏதோ விபத்து ஏற்பட்டதாக பதறினார்கள். இதையடுத்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே எசுபிளனேடு, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணியில் இருந்து சம்பவ இடம் நோக்கி தீயணைப்பு வாகனங்கள் பறந்தன.

தீயை அணைத்தனர்

அங்கு ஜெனரேட்டர் அறையில் இருந்த மின்மாற்றிகளில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. தீயின் வேகம் தாங்காமல் இரும்பு தடுப்புகள் வளைந்து நெளிந்து போயிருந்தன. இதையடுத்து 'போர்ம்' கலவையும், அதனைத்தொடர்ந்து தண்ணீரையும் பீய்ச்சியடித்து தீயின் வேகத்தை கட்டுப்படுத்த வீரர்கள் முயன்றனர். 15 நிமிடங்கள் போராடி தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். மின்மாற்றியில் உள்ள ஆயில் அதிக வெப்பத்தால் வெளியேறியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே தீ விபத்து நடந்த இடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக பார்வையிட்டார். அப்போது ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி 'டீன்' டாக்டர் தேரணிராஜன் உடனிருந்தார்.

மின் கேபிள்கள் பழுது

தீ விபத்து குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மருத்துவக்கல்லூரி விடுதி வளாகத்தில் ரெயில்வே துறை சார்பில் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில் பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சீரமைக்கும்போது தரைக்கு அடியில் செல்லும் மின் கேபிள்களில் பழுது ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் மின்னழுத்தம் ஏற்பட்டு மின்மாற்றிகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. வெளியேறிய புகையும் அதிகமாகவே இருந்திருக்கிறது.இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

உடனடி நடவடிக்கை

தற்போது புதிய மின்கேபிள்களை ஒரு பிளாஸ்டிக் குழாயில் பொருத்தி அதனை ஆழமாக புதைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தீ விபத்தால் மின்மாற்றிகள் வைக்கப்பட்ட கட்டிடம் மட்டும் லேசாக சிதிலம் அடைந்துள்ளது.

அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பொதுப்பணித்துறையும், மின்சார வாரியமும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் காரணமாக சில மணி நேரம் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.


Next Story