பர்கூர் அருகே மளிகை கடையில் 'திடீர்' தீ
பர்கூர் அருகே மளிகை கடையில் ‘திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லபாடியில் செல்வம் (வயது 55) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல கடையை திறந்து விற்பனை செய்து வந்தார். கடையின் உட்புறத்தில் உள்ள ஒரு அறையில் பழைய அட்டைப்பெட்டிகளையும், உபயோகமற்ற பொருட்களையும் வைத்திருந்தார்.
அப்போது அந்த அறையில் இருந்து திடீரென கரும்புகையுடன் அட்டை பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அதற்குள் அந்த தீ மளிகை கடைக்குள்ளும் பரவியது. உடனடியாக செல்வம் பர்கூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கடைக்குள் இருந்த மளிகை பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். தீயணைப்பு வீரர்களும் தாமதமின்றி தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தீக்கிரையானது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா? என பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மளிகை கடையில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.