வெல்டிங் செய்த போது பொக்லைன் எந்திரத்தில் திடீர் தீ
வெல்டிங் செய்த போது பொக்லைன் எந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55). இவர் ஒப்பந்தம் எடுத்துள்ள பல்வேறு பணிகளுக்கு பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் பொக்லைன் எந்திரத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக கந்தம்பாளையத்தில் உள்ள பழுதுபார்க்கும் நிறுவனத்தில் பழுதை நீக்க பொக்லைன் எந்திரத்தை விட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் பொக்லைன் எந்திரத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை தொழிலாளர்கள் வெல்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வயர்களில் வெல்டிங் தீப்பொறி பட்டு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அங்கு இருந்த தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரத்தில் பிடித்து எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வெல்டிங் பட்டறைக்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.