துணிக்கடையில் திடீர் தீ
ராமநாதபுரத்தில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் இருந்து பாரதிநகர் செல்லும் பகுதியில் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் குமரையா கோவில் அருகில் துணிக்கடை அமைந்துள்ளது. இந்த கடையின் உரிமையாளர் பெரோஸ்கான் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்துவிட்டு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென்று கடையில் தீப்பிடித்தது. கடைக்குள் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி வழியாக நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். கடையில் கணினி பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. உரிய நேரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ துணிகளுக்கு பரவாமல் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த கணினி, மேஜை, மின்விசிறி உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.