திருமண வீட்டின் பந்தலில் திடீர் தீ
பேட்டையில் திருமண வீட்டில் பந்தலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டை
பேட்டையில் திருமண வீட்டில் பந்தலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமண வீடு
நெல்லையை அடுத்த பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் நரிக்குறவர் காலனியில் முதியவர் ஒருவர் இறந்து விட்டதாலும், மணமகன் வீட்டிலும், மணமகள் வீட்டிலும் உள்ள ஒருவருக்கு அம்மன் போடப்பட்டு இருப்பதாலும் திருமணத்தை வருகிற திங்கட்கிழமை நடத்தலாம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் முடிவு செய்தனர்.
பந்தலில் தீ
இந்த நிலையில் திருமணத்தை முன்னிட்டு நரிக்குறவர் காலனியில் மணமக்கள் வீட்டில் முன்பு பந்தல் போட்டு உள்ளனர். அந்த பந்தலின் மேல் பகுதியில் மின் வயர் செல்கிறது.
அப்பகுதியில் மரக்கிளையை ஒருவர் வெட்டியுள்ளார். வெட்டிய மரக்கிளை மின் வயரில் விழுந்ததில், ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி கிளம்பி அது பந்தல் மீது விழுந்து பந்தல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
தீயணைப்பு
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்தையா தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
மின்சார வாரிய இளநிலை பொறியாளர் சரவணன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக மின் வயரை மாற்றி மின்சாரம் வழங்கினர்.
அந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.