நெல் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து
தஞ்சையில் நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சாக்குகள், தார்ப்பாய்கள் எரிந்தன.
தீ விபத்து
தஞ்சை மாவட்டத்தில் ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையின்போது மழைச்சாரல் குடோனுக்குள் விழுந்ததால் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த அலுமினியம் பாஸ்பேட் தீப்பிடித்து எரிந்தது. இதனால் குடோனில் இருந்து புகை வெளிவந்தது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த காலி சாக்குகள், தார்ப்பாய்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சில இடங்களில் லேசாக தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மிகக் குறைந்த அளவில் சேதம் ஏற்பட்டது. நெல் மூட்டைகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை.
எவ்வளவு நெல் சேதம்?
தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சேதம் அடைந்த சாக்குகளை மாற்றிவிட்டு வேறு சாக்குகளில் நெல்லை பிடித்து பாதுகாப்பான இடத்தில் இருப்பு வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, குடோனில் பூச்சிகள் தாக்காத வகையில் அங்கு மாத்திரை அளவில் அலுமினியம் பாஸ்பேட் என்ற ரசாயனம் மருந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் அலுமினியம் பாஸ்பேட் நேற்று காலை தீப்பிடித்துள்ளது. இதில் நெல் மூட்டைகள் பெரிதாக சேதம் ஏற்படவில்லை. இருந்தாலும் ஒரு சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனை வேறு சாக்குகளில் மாற்றி வருகிறோம். எவ்வளவு கிலோ நெல் சேதம் அடைந்துள்ளது என கணக்கிட்டு வருகிறோம் என்றனர்.