விசைப்படகில் 'திடீர்' தீ
குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் விசைப்படகு ‘திடீரென’ தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் தப்பியது.
குளச்சல்,
குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் விசைப்படகு 'திடீரென' தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் தப்பியது.
விசைப்படகில் தீ
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் டொனோட்டஸ் (வயது 38). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.
அந்த படகை சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு எடுத்து சென்று மீன் பிடித்தவர்கள் நேற்று மாலை மீன்பிடித்துறைமுகத்துக்கு திரும்பி நிறுத்தியிருந்தனர். பின்னர் படகின் சமையல் செய்யும் அறையில் இரவு தொழிலாளர்கள் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் ஸ்டவ்வின் டியூப்பில் திடீரென தீப்பற்றியது. அதை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் படகிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.
அதற்குள் தீ மளமளவென விசைப்படகில் உள்ள ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுக்கும் பரவி எரிந்தது. படகின் மேற்கூரையும் தீப்பிடித்து எரிந்தது.
மீன்கள் தப்பியது
உடனே மீனவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியல் ஈடுபட்டனர். அதே சமயம் படகுகளுக்கு டெம்போவில் கொண்டுவந்த தண்ணீரையும் மீனவர்கள் பீய்ச்சியடித்தனர். அதைத்தொடர்ந்து தீ அணைந்தது.
அதே சமயம் பிடித்து வந்த மீன்களை பதப்படுத்தி வைத்திருந்த அறைக்கு தீ பரவவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் தப்பியது. இந்த சம்பவத்தால் நேற்றிரவு குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.