கருங்கல் மலையில் 'திடீர்' காட்டுத்தீ


கருங்கல் மலையில் திடீர் காட்டுத்தீ
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:45 PM GMT)

கருங்கல் மலையில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் மலையில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.

திடீர் தீ

கருங்கல் அருகே உள்ள சிந்தன்விளையில் கருங்கல் மலை உள்ளது. இந்த மலை கப்பியறை பேரூராட்சி மற்றும் திப்பிரமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதன் அடிவாரப்பகுதிகளில் சிந்தன்விளை, வாழவிளை, ஓலவிளை, கருக்கி போன்ற குக்கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஏராளமான குடியிருப்புகளும், வழிபாட்டு தலங்களும் உள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் சிந்தன்விளை பகுதியில் மலை உச்சியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மள... மளவென எரிந்து பரவ தொடங்கியது. இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

3 மணி ேநரம் போராடி அணைத்தனர்

குளச்சல் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி இரவு 10 மணியளவில் தீயை அணைத்தனர்.

குடியிருப்பு பகுதியில் பரவும் முன்பு தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விரைவாக செயல்பட்ட தீயணைப்பு படை வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story