கோத்தகிரி அருகே திடீர் நிலச்சரிவு


கோத்தகிரி அருகே திடீர் நிலச்சரிவு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திடீர் நிலச்சரிவு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை ஊட்டி மற்றும் ஏராளமான கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இதனால் எப்போது இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில், கோத்தகிரி-கூக்கல்தொரை சாலையில் சீக்கூர்மட்டம் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையில் பக்கவாட்டில் 100 அடி உயரமுள்ள செங்குத்தான பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, மண் மற்றும் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன.

போக்குவரத்து துண்டிப்பு

மேலும் மண் மற்றும் சுமார் 30-க்கும் மேற்பட்ட ராட்சத பாறைகள் சாலையில் உள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு, தாழ்வான பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் நீரோடைக்குள் உருண்டு சென்று விழுந்தன.

நிலச்சரிவின் காரணமாக சாலை முழுவதும் மண் மற்றும் பாறைகள் நிறைந்து காணப்பட்டது. இதனால் கோத்தகிரி-கூக்கல்தொரை சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதைக்கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக இதுகுறித்து கோத்தகிரி நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு

தகவல் அறிந்த கோத்தகிரி உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், பொறியாளர் ரமேஷ், ஆய்வாளர்கள் சிவகுமார், கிருஷ்ணன், ஜெயகுமார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி சாலையில் கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் ராட்சத பாறையை உடைக்கும் பணியிலும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோத்தகிரி-கூக்கல்தொரை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நாரகிரி வழியாகவும், வெஸ்ட்புரூக், கக்குச்சி வழியாகவும் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த முக்கிய சாலையில் அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், அந்த நேரத்தில் அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மண்ணில் ஏற்பட்ட ஈரப்பதம்

நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மேற்புறம் உப்பக்கம்பை மற்றும் சீக்கூரி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள விவசாயிகள் பயன்படுத்துவதற்காக அங்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வந்ததால் அந்த கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது, மண்ணில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு, கால்வாயில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறியுள்ளது. இதன் காரணமாக தான் மழை பெய்வது நின்று சில நாட்கள் ஆகியும் கூட, அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகளும் சரிந்து விழுந்துள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story