பாபநாசம் மலைப்பாதையில் 'திடீர்' மண்சரிவு
தொடர் மழையால் பாபநாசம் மலைப்பாதையில் ‘திடீர்’ மண்சரிவு ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
தொடர் மழையால் பாபநாசம் மலைப்பாதையில் 'திடீர்' மண்சரிவு ஏற்பட்டது.
மலைப்பாதையில் மண் சரிவு
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் பாபநாசம் முண்டந்துறை மலைப்பாதையில் அகஸ்தியர் அருவி பாதைக்கு மேலாக பாபநாசம் கீழணைக்கு செல்லும் வழியில் சாலையோரம் 'திடீர்' மண் சரிவு ஏற்பட்டது.
அங்குள்ள தடுப்பு சுவரும் இடிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைந்தனர்.
சீரமைக்கும் பணி
உடனே நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று, மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மண் மூட்டைகளை அடுக்கி வைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வழியாகத்தான் சேர்வலாறு அணை மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யானார் கோவிலுக்கு அனைவரும் சென்று வருகின்றனர். காணி குடியிருப்புவாசிகளும் இந்த பாதை வழியாகத்தான் செல்கின்றனர்.
எனவே சாலையில் மண் அரிப்பு ஏற்படதாதவாறு தடுப்புச்சுவர் அமைத்து சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.