சென்னையில் இருந்து புறப்பட்ட தாய்லாந்து விமானத்தில் திடீா் எந்திர கோளாறு - 164 போ் உயிா் தப்பினர்


சென்னையில் இருந்து புறப்பட்ட தாய்லாந்து விமானத்தில் திடீா் எந்திர கோளாறு - 164 போ் உயிா் தப்பினர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 12 Jun 2022 1:11 AM GMT (Updated: 12 Jun 2022 1:12 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் எந்திரகோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதனால் 164 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை

ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிற்கு அதிகாலை 1.10 மணிக்கு விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் செல்ல பாதுகாப்பு சோதனை, குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்து கொண்டு 158 பயணிகள் விமானத்தில் ஏறினர். அதேபோல் விமான ஊழியர்கள் 6 பேரும் விமானத்தில் ஏறிக்கொண்டனா்.

பின்னர் 164 பேருடன் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விமானம் ஓடு பாதையில் ஓடத்தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானி கண்டுபிடித்தார். விமானம் வானில் பறக்க தொடங்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, ஓடுபாதையில் விமானத்தை நிறுத்தினார். இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர தகவல் கொடுத்தார்.

இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரகோளாறை பழுது பார்க்கும் பணியில் விமான என்ஜினீயர்கள் குழுவினர் ஈடுபட்டனர்.

ஆனால் எந்திரகோளாறை சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 158 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் பரிதவித்தனர். இந்த விமானம் பழுது பார்த்த பிறகு புறப்பட்டுச் செல்லும் என்று அதிகாரிக்ள் தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டு பிடித்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 164 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story