கலெக்டர் அலுவலகத்தில் வடக்கு மாதவி கிராம மக்கள் 'திடீர்' ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் வடக்கு மாதவி கிராம மக்கள் ‘திடீர்' ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒரு கட்சியின் கொடிக்கு கம்பம் கட்ட முயன்றனர். அப்போது இது சம்பந்தமாக புகார் கொடுத்ததன் பேரில், வருவாய் கோட்டாட்சியர் அந்த இடத்தில் யாரும் கட்சி கொடி கம்பம் கட்டக்கூடாது என்றார். இந்த நிலையில் அதே இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் கொடி கம்பம் கட்ட முயன்றனர். இதுகுறித்து நாங்கள் மறுநாள் அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் எங்களை தகாத வார்த்தையால் திட்டியும், சிலரை தாக்க முயற்சித்தும், கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது தொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரை பெரம்பலூர் போலீசார் வாங்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் ஊரை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த 30 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் 10 பேரை இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். அதனை கண்டித்தும், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.