விருத்தாசலத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்ததால் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது
விருத்தாசலம்
ஐகோர்ட்டு உத்தரவு
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் சாலை இந்திரா நகரில் உள்ள 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
விருத்தாசலம்-கடலூர் சாலையில் இருபுறங்களிலும் உள்ள கடைகளை அகற்றிய நிலையில், இந்திரா நகரில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு பொக்லைன் எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு செல்வதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதும், அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
திடீர் போராட்டம்
இந்த நிலையில் நேற்று விருத்தாசலம் தாசில்தார் தனபதி மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்திராநகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நவீன ரக எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
ஆனால் இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
தள்ளுமுள்ளு
அப்போது சில பெண்கள் தாசில்தார் தனபதி மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டியதுடன், சமாதானப்படுத்த முயன்ற போலீசாருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து வருவாய் துறை ஊழியர்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தோம். நாங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றவரவில்லை. எனவே ஒருமையில் பேசுவது தவறு என கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு நவீன எந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தர்ணா
இதற்கிடையே பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலையில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி வீதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவி வருகிறது.